மாநாட்டு பந்தல்; கான்கிரீட் போட்டு தூண்களை பலப்படுத்த முடிவு
மாநாட்டு பந்தல்; கான்கிரீட் போட்டு தூண்களை பலப்படுத்த முடிவு
மாநாட்டு பந்தல்; கான்கிரீட் போட்டு தூண்களை பலப்படுத்த முடிவு
கோவை:செம்மொழி மாநாட்டுப் பந்தலின் இரும்புத் தூண்கள் முழுவதுமாக, கான்கிரீட் தளம் கொண்டு பலப்படுத்தப்படும் என்று பொதுப்பணித்துறை அதிகாரிகள் உறுதி கூறியுள்ளனர்.கோவையில் உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டு நிகழ்ச்சிகள் அனைத்தும், கொடிசியா தொழிற்காட்சி வளாகத்திலும், அதைச் சுற்றிலும் உள்ள பகுதிகளில் மட்டுமே நடக்கின்றன.
மிகவும் தாழ்வாக இருந்த இந்தப் பகுதியில், ஒரு லட்சத்து 80 ஆயிரம் கன மீட்டர் எடையுள்ள மண் கொண்டு நிரப்பப்பட்டுள்ளது. இதன் ஒரு பகுதியில், கண்காட்சி அரங்கமும், மறுபுறத்தில் மாநாட்டுப் பந்தல் மற்றும் உணவுக் கூடங்களும் தயார் செய்யப்பட உள்ளன.கண்காட்சி அரங்கம், அதற்கான மின் அலங்காரம் உள்ளிட்ட அனைத்து ஏற்பாடுகளும், பிரபல கலை இயக்குனர் தோட்டா தரணியிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. இதற்காக மட்டுமே, இரண்டு கோடியே 90 லட்ச ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. இதற்கு அருகிலும் ஓர் உணவுக் கூடம் அமைக்கப்படுகிறது. மாநாட்டுப் பந்தல், பிரதான உணவுக்கூடம், ஊடக அறை, மருத்துவ மையங்கள், காவல்துறை கட்டுப்பாட்டு அறை, அலங்கார ஊர்தி தயாரிப்புக்கான பந்தல், வ.உ.சி., மைதானத்தில் தற்காலிக கழிப்பிடங்கள், ஊர்வலத்தை வி.ஐ.பி.,க்கள் பார்வையிடும் மேடைகளை, பொதுப்பணித் துறையினர் அமைக்கின்றனர்.
இந்த பணிகள் அனைத்துக்குமாக, ஐந்து கோடியே 90 லட்ச ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. எல்லாவற்றையும் விட, மாநாட்டுப் பந்தலை சிறப்பாக அமைக்க வேண்டுமென்பதில் கலெக்டர் உள்ளிட்ட அதிகாரிகள் அதிக கவனம் செலுத்தி வருகின்றனர்.முதல்வர் உட்பட ஒரு லட்சம் பேர் வரை, இந்த மாநாட்டுப் பந்தலுக்குள் அமரும் வாய்ப்பு இருப்பதால், மிகவும் பாதுகாப்புடன் இந்த பந்தலை அமைக்க வேண்டியது கட்டாயமாகவுள்ளது. பந்தல் அமைக்கும் பகுதி, வெட்டவெளியாக இருப்பதால் காற்றின் வேகம் மிக அதிகமாகவுள்ளது.
எனவே, கான்கிரீட் தளம் அமைத்து, அதன் மீது இரும்புத் தூண்களை பலமாகப் பொருத்த வேண்டுமென்று பொதுப்பணித்துறையினருக்கு கலெக்டர் உமாநாத் அறிவுறுத்தியுள்ளார். பணிகள் முழுமையாக முடியும்போது, பந்தல் பாதுகாப்புடன் இருக்க வேண்டுமென்றும் அவர் உத்தரவிட்டுள்ளார்.இதன் காரணமாக, இரும்புத் தூண்களைச் சுற்றிலும், கான்கிரீட் போட்டு பலப்படுத்த, பொதுப்பணித்துறையினர் நடவடிக்கை எடுத்துள்ளனர்.